வாசிப்பின் மகத்துவம்



பெயர் : பூ.கொ.சரவணன்
தந்தை : கேஸ் ஸ்டவ் மெக்கானிக்.
தாய் : ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியை
விகடன் மாணவப் பத்திரிகையாளர் : 2011-2012
தற்போதைய வேலை : உதவி ஆணையர், ஐ.ஆர்.எஸ் (சுங்கம் & மத்திய கலால்)

செஞ்சிக்குப் பக்கத்தில் இருக்கும் `பொன்பத்தி' என்கிற பேருந்துகூட எட்டிப்பார்க்காத கிராமத்துப் பையன்தான் இந்தப் பூ.கொ.

படிப்பு வாசமே இல்லாத பரம்பரையில் பிறந்தவர். இவர் தாத்தா காலம்வரை மாடு மேய்த்தே வாழ்ந்தார்கள் என்பதால் இவரது குடும்பத்துக்கு `மாட்டுக்கார வீடு’ என்றே பெயராம். கூரை வீட்டில்தான் இவரது பால்யகாலம் கழிந்திருக்கிறது. கேஸ் அடுப்பு ரிப்பேர் செய்யும் `கேஸ் மெக்கானிக்' இவரது அப்பா. அவரின் ஊக்கத்தால்தான் பூ.கொ-வுக்கு வாசிப்புப் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.

``என் அப்பாவுக்கு நிறையப் படிக்கணும்னு ஆசை. குடும்பச் சூழலால அதுக்கு வாய்ப்பில்லாம போச்சு. வேறெந்த பின்புலமும் இல்லைனாலும் படிப்பு நம்மள கரையேத்தும்னு நம்பிக்கையா சொல்வார். எனக்கு நியூஸ் பேப்பர் கடையில் பழைய புத்தகங்களை வாங்கி வந்து தருவார். அதுதான் எனக்குப் பெரிய பொழுதுபோக்கு. தப்பும், தவறுமா பேசுனாலும் மேடையேறு ஐயான்னு அம்மா என்னைத் தொடர்ந்து ஊக்குவிச்சாங்க. அம்மா எழுதிக்கொடுத்து நான் பேசிய முதல் தலைப்பு `வீட்டுக்கும், நாட்டுக்கும் தேவை பெண் குழந்தையே'. அப்புறம், மனப்பாடம் ஒத்துவராதுன்னு தெரிஞ்சு சொந்தமாவே பேசப் பழகினேன்" என்கிறார்.

பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும்போதே, விகடனின் சுட்டி க்விஸ் விஸ் கலந்துகொண்டு அரையிறுதி வரை வந்த போது, பரிசாகக் கொடுக்கப்பட்ட விகடன் பிரசுர புத்தகங்களால் மேலும் வாசிப்பின் மீது தீராத காதல் ஏற்பட்டிருக்கிறது. `அம்மா கண்டிப்பான ஆசிரியர். விகடன் வெளியிட்ட சங்கர சரவணன் சார் எழுதிய கையளவு களஞ்சியத்தை முழுசாப் படிக்க வைச்சு, கேள்வி மேல கேள்வி கேப்பாங்க. அதுதான் பரந்துபட்ட தேடலுக்கான ஆரம்பப்புள்ளி' என்கிறார்.

இதழியல் துறையில் சாதிக்க வேண்டும் என்கிற ஆர்வம் ஏற்பட. கல்லூரி சேர்ந்த முதல் நாளே இவரது அப்பாவுடன் நடந்தே விகடன் அலுவலத்தைத் தேடியிருக்கிறார்.

``யாரோ சொன்னாங்க... மவுன்ட் ரோட்டுலதான் விகடன் ஆபீஸ் இருக்குனு அப்பாவைக் கூட்டிட்டு நடந்தே வந்தேன். உச்சி வெயில், அப்பா காலில் செருப்பு கூட அணியாததால்.... வெயிலில் வெந்துடுச்சு. `என்னப்பா... இப்படிப் பண்ணிட்டே' ன்னு அப்பா என்கிட்ட ரொம்ப வருத்தப்பட்டார். இதற்காகவே விகடனில் சேரணும்னு லட்சியம் எனக்கு ஏற்பட்டது. முதல் முயற்சி தோல்வி. இரண்டாவது முயற்சியில்தான், விகடனில் மாணவ நிருபராக 2011-12-ல் தேர்வானேன்." என்பவர்.
அந்த வருடத்தில், அர்விந்த் கேஜ்ரிவால், அருந்ததி ராய் என்று பலரை பேட்டி எடுத்து தலைசிறந்த மாணவ நிருபராகவும் தேர்வு செய்யப்பட்டார்.

கன்னிமாரா நூலகத்தில் முக்கியமான புத்தகங்கள் என நூறு புத்தகங்களைப் பட்டியலிட்டால், அவற்றில் 90% புத்தகங்களை இவர் படித்திருப்பார். நண்பர்கள் பார்க்கும் போதெல்லாம் புத்தகங்களைப் பரிசாகத் தந்துகொண்டிருப்பார்கள், அதிகபட்சம் இரண்டு நாள்களுக்குள் அந்தப் புத்தகம் பற்றிய அறிமுகத்தைத் தன்னுடைய வலைப்பக்கத்தில் பதிவு செய்வார். அத்தனை வேகமான வாசிப்புக்குச் சொந்தக்காரர். அவர் அறை முழுக்க அடுக்கப்பட்ட புத்தகங்களின் அடுத்த வரிசையில் கலைந்துகிடக்கும் புத்தகங்களுக்கு மத்தியில்தான் உறக்கமும் ஓய்வும். வாசிப்பு மட்டுமே ஒருவரை உயர்த்தும் என உறுதியாக நம்பி, செய்து காட்டியவர்.

அடுத்து அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி பொறியியல் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது, தமிழ்வழியில் பொறியியல் படிப்பு அறிமுகப்படுத்தப்பட பாடப் புத்தகங்களைத் தமிழில் மொழிபெயர்த்துத் தந்தார். படித்து முடித்த பின் இந்தியக் குடிமைப் பணி தேர்வுக்குத் தயாரானார்.

அப்போதும்.... தினந்தோறும் ஒரு தலைவரைப் பற்றி, வரலாற்று நிகழ்வைப் பற்றி, புத்தகங்களைப் பற்றி எனத் தொடர்ச்சியாக ஒரு வருடத்துக்கும் மேலாக விகடன்.காமில் காலையில் முதல் பதிவாக எழுதினார். பிறகு, இந்தத் தொடர் ஆடியோ வடிவில் `ஒரு தேதி ஒரு சேதி' என விகடன் யூ-டியூபில் வெளியானது. அதன்பிறகு இவற்றின் தொகுப்பு `டாப் 200 வரலாற்று மனிதர்கள்', `டாப் 100 அறிவியல் மேதைகள்' என இரண்டு புத்தகங்கள் விகடன் பிரசுரம் மூலமாகவும் வெளியாகின.

``விகடன்தான் எனக்குப் பல வாசல்களைத் திறந்துவிட்டது. என் எழுத்தும், என் குரலும், என் முதல் புத்தகமும் என வெளியிட்டு அழகு பார்த்தது விகடன். UPSC இறுதிக்கட்ட நேர்முகத் தேர்வில் கூட நான் எழுதிய `ஒரு தேதி ஒரு சேதி' பற்றிச் சில கேள்விகளைக் கேட்டார்கள். சொன்னேன். என் மீது மதிப்பு வர விகடனும் ஒரு காரணமாக இருந்தது." என்று அழுத்தமாகவே சொல்கிறார்.

அதன்பின் ஓரிரு ஆங்கிலப் புத்தகங்களை மொழிபெயர்ப்புச் செய்யலாம் என்ற எண்ணம் இவருக்குள் ஏற்பட்டது. விடா முயற்சியால் புத்தகங்களையும் மொழிபெயர்த்தார். தமிழில் பெரிதாக எழுதாத வரலாற்று ஆய்வாளர் எம்.எஸ்.எஸ்.பாண்டியன் அவர்கள் எழுதிய ``The Image Trap: M.G. Ramachandran in Film and Politics" என்ற புத்தகத்தை ``பிம்பச் சிறை எம்.ஜி.ராமச்சந்திரன் – திரையிலும் அரசியலிலும்” என மொழிபெயர்த்தார். மூலப்புத்தகம் வெளியாகி 24 ஆண்டுகள் கழித்து இந்த மொழிபெயர்ப்பு வெளியானது.
ராமச்சந்திர குஹா, சுனில் கில்னானி, ஆஷிஷ் நந்தி, ரொமிலா தாப்பர், முசிருல் ஹசன், எலினார் ஜெல்லியாட் என முக்கியமான ஆளுமைகளை அறிமுகப்படுத்துவது, அவர்கள் கட்டுரைகளைத் தமிழில் தொடர்ந்து மொழிபெயர்ப்பது எனத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். `மொழிபெயர்ப்பு நம்மோட தாய்மொழியில உலகம் முழுக்கக் கொட்டிக்கிடக்கிற அற்புதத்தை எல்லாம் அள்ளித்தருகிற ஒன்று. அதனால், இப்போதும் நேரம் கிடைக்கிறப்பலாம் கட்டுரைகளை மொழிபெயர்க்கிறேன். ஆங்கிலம் சரளமாக அறிந்த தமிழ்நாட்டு இளைஞர்கள் எல்லாம் அப்பப்ப கையளவு மொழிபெயர்ப்பு பண்ணாலே கடலளவு குவிஞ்சுரும். என் தளத்தை creative commons-ல் பதிந்துள்ளேன். ஊர் கூடி அறிவுத்தேர் இழுப்போம்'

தமிழில் அபூர்வமான நேருவிய சிந்தனையாளர்களில் ஒருவர் இந்தப் பூ.கொ. பல கல்லூரிகளில் மாணவர்களுக்குத் தன்னம்பிக்கையளிக்கக் கூடிய வகையில் பேசுவதைக் கடந்த சில வருடங்களாக வாடிக்கையாக வைத்திருக்கிறார். அரசுப் பள்ளிகள் முதல் சென்னை மருத்துவக் கல்லூரி வரை விதவிதமான மேடைகளில் பலருக்கு வாசிப்பையும் தன்னம்பிக்கையையும் ஊட்டிக்கொண்டிருக்கிறார்.

முதல் முறை UPSC-ல் தோற்றாலும், இரண்டாவது முறை தொடர் முயற்சியால்... அகில இந்திய அளவில் 725-ம் பிடித்து இந்திய வருவாய் பணி (சுங்கம் & மத்திய கலால்)-ல் உதவி ஆணையராகப் பணி கிடைத்தது.


``நான் என்ன செய்தாலும் முழு ஈடுபாட்டுடன் செய்வேன். அதுதான் என் வெற்றிக்குக் காரணம்னு நினைக்கிறேன். பிழைப்புக்காக வாழவே கட்டாயப்படுத்தப்படுறோம். மனதின் அழைப்பு நாடி பயணிப்பதும் முக்கியம். இப்பக் கூட நான் பெரிசாகச் சாதித்துவிட்டதாக நினைக்கவில்லை. இன்னும் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கு.

இப்பதான் எங்களுக்கான பயிற்சிகள் முடிந்தது. அதை முன்னிட்டுக் குடியரசுத் தலைவரை ஜனாதிபதி மாளிகையில் சந்தித்தோம். மொத்தம் 172 அதிகாரிகள் காணச் சென்றோம். அவர்களில் நான்கு பேருக்கு அவர் முன்னே பேச வாய்ப்புக் கிடைத்தது. அந்த நால்வரில் நானும் ஒருவன். மூன்று நிமிடங்களுக்குள் பேசி முடிக்க வேண்டும் என்று சொன்னார்கள். நான் கடந்து வந்த பாதையைச் சொன்னேன். குடியரசு தலைவர் கைதட்டினார். அதன்பின் அங்கிருந்தவர்களும் கைதட்டினார்கள். அதுதான் அங்கு மரபு. என் பேச்சின் நடுவே,
`ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர் '

என்கிற குறளைச் சொன்னேன். காரணம், எல்லாம் விதிப்படி நடக்கும்னும், தலையில அதான் விதிச்சிருக்குனும் அடிக்கடி சொல்வாங்க. விடாம முயற்சி பண்ணா விதியையும் தோற்கடிக்கலாம்னு வள்ளுவர் சொல்றது எவ்ளோ உண்மை, அதுதான். இனி பல விதி செய்வோம் தோழர்களே!'


வாழ்த்துகள் பூ.கொ. நல்ல கனவுகள் நனவாகும்!

Comments

Popular posts from this blog

நிலத்தடி நீர் காப்போம்

கணனி பயில்வோம் 02

பார்வை திரும்புமா